ராஜஸ்தானில் இளம் பெண்ணையும் இளைஞனையும் மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் அடித்த வீடியோ வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் இளம் பெண்ணும், இளைஞனும் உள்ளூர் மக்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர். பன்ஸ்வாராவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் திருமணமான பெண்ணும் அவரது இளம் நண்பரும் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களால் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டது. திருமணமான பெண், வேறு கிராமத்தைச் சேர்ந்த இளைஞனுடன் இருந்த காட்சி, கிராம மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. பின்னர் இருவரையும் அழைத்துச் சென்று மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது. மரத்தில் கட்டிவைக்கப்பட்ட பின்னர், பெண்ணை கட்டையால் தாக்கியதும், பெண் கதறுவதும் காட்சிகளில் பதிவாகியுள்ளது.
அந்த பெண்ணை தாக்கும் காட்சிகள் வைரலானதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையில், இந்த சம்பவத்திற்கு ராஜஸ்தான் அரசை பாஜக குற்றம் சாட்டியது. காங்கிரஸ் ஆட்சியில் இந்த நிலையைத்தான் மாநிலத்தில் பெண்கள் சந்திக்கிறார்கள் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.