மனைவியின் கழுத்தை அறுத்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் ஜியாபத்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் இறைச்சி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரியாஷ்பி(44) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ஜெயம்கொண்டத்தில் இருக்கும் வாடகை வீட்டிற்கு சென்று வசிக்கலாம் என ரியாஷ்பியிடம் அவரது கணவர் கூறியுள்ளார். அதற்கு ரியாஷ்பி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீட்டில் போதிய வசதி செய்து கொடுத்தால் குடியிருக்கலாம் என ரியாஷ்பி கூறியதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது ஜியாபத் வீட்டில் இருந்த அனைவரையும் வெளியேற்றி கதவை பூட்டிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த இறைச்சி வெட்டும் கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து மார்பில் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ரியாஷ்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரியாஷ்பியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் ஜியாபத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.