உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெண் குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் கல்வியை கருத்தில் கொண்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளார். அதாவது கன்யா சுமங்கலா யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் இருப்பவர்கள் சேர்ந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 14 லட்சம் பெண் குழந்தைகள் பயன்பெற்றுள்ளதாகவும், ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கிறது எனவும் முதல்வர் கூறியுள்ளார். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் முதலில் தபால் அலுவலகத்தில் கணக்கை தொடங்கி கொள்ள வேண்டும்.
இந்த திட்டத்தின் படி வழங்கப்படும் 15,000 உதவித்தொகை 6 தவணைகளாக வழங்கப்படும். அதன்படி ஒரு குழந்தை பிறந்தவுடன் முதல் தவணையாக 2000 ரூபாயும், தடுப்பூசி போடப்பட்ட பிறகு 2-வது தவணையாக 1000 ரூபாயும், 1-ம் வகுப்பில் சேரும்போது 3-வது தவணையாக 2000 ரூபாயும், 6-ம் வகுப்பில் சேரும்போது 4-வது தவணையாக 2000 ரூபாயும், 9-ம் வகுப்பில் சேரும்போது 5-வது தவணையாக 3000 ரூபாயும், 10 அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சிக்கு பிறகு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பில் சேரும்போது 6-வது தவணையாக 5000 ரூபாயும் வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்புபவர்கள் https://mksy.up.gov.in/women_welfare/index.php என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.