கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபுதூர் பகுதியில் யோகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு யோகேஸ்வரன் தேவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவர் வீட்டில் இருந்தபோது மாமியார் கிருஷ்ணவேணி தேவியை அடிக்கடி திட்டியுள்ளார். இதனால் யோகேஸ்வரன் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் குடியேறினார். இதனையடுத்து வரதட்சணையாக 5 லட்ச ரூபாய் வாங்கி வருமாறு யோகேஸ்வரனும், கிருஷ்ணவேணியும் தேவியை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் கடந்த 2016-ஆம் ஆண்டு தேவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் யோகேஸ்வரன் மற்றும் கிருஷ்ணவேணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம் யோகேஸ்வரனுக்கு 1500 ரூபாய் அபராதமும், 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. மேலும் கிருஷ்ணவேணிக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், 1 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.