தேனி மாவட்டத்தில், துப்புரவுப் பணியாளர்களுக்கு செய்து தரப்பட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களுக்காக மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்கள் உரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறதா? என்பது குறித்து தேசிய துப்புரவுப் பணியாளர் அமைச்சகத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் துறையின் உறுப்பினரான ஜெகதீஸ் ஹீர்மானி ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து தேனி – அல்லிநகரம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். துப்புரவு பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை சம்பளம், வருங்கால வைப்பு நிதி, குடியிருப்பு வசதிகள், ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு கிடைக்கும் பலன்கள் ஆகியவற்றைக் கேட்டறிந்தார்.
பின்னர் சிறந்த முறையில் பணியாற்றிய ஐந்து துப்புரவுப் பணியாளர்களை நாற்காலியில் அமர வைத்து, அவர்களுக்கு மாலை, சால்வை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது, பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.
ஆணையத்தின் உறுப்பினர் பெண் துப்புரவுப் பணியாளரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய சம்பவம் அங்கு கூடியிருந்த துப்புரவுப் பணியாளர்களையும், அரசு அலுவலர்களையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.