புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களிடம் தகராறு ஏற்பட்டதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கலாமணி என்ற மனைவி இருந்தார். கலாமணி திருமணத்திற்கு முன்பு சின்னப்பம்பட்டியிலுள்ள தனியார் பல் மருத்துவமனையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு பிறகும் அந்த வேலையை தொடர்ந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் வேலை பார்க்கும் சக ஊழியர்களுக்கும் கலாமணிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கலாமணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர் கார்த்திகேயன் கலாமணியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கலாமணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுக்குறித்து கலாமணியின் கணவர் எனது மனைவி இறப்பிற்கு மருத்துவமனை ஊழியர்கள் தான் காரணம் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் மருத்துவமனை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.