வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இறச்சகுளம் அருள் ஞான புரம் பகுதியில் அஜீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வழக்கறிஞரான சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை சாந்தி தனது ஸ்கூட்டரில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் இறச்சகுளம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த அஜீஸ் தனது மனைவியை வழிமறித்து தகராறு செய்துள்ளார்.
இதனையடுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அஜீஸ் சாந்தியின் வலது கையில் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அஜீஸை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.