தேசிய பென்ஷன் திட்டம் மற்றும் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் ஆகியவற்றின் கீழ் உள்ள ஒட்டு மொத்த சொத்துக்களின் மதிப்பு 29.88% உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் நிலவரத்தின்படி தேசிய பென்ஷன் திட்டம் மற்றும் அடல் பென்ஷன் யோஜனா ஆகிய இரு திட்டங்களின் கீழ் 6.27 லட்சம் கோடியாக சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 29.88% உயர்வாகும். கடந்த வருடம் ஜூலை 31 ஆம் தேதி நிலவரத்தின்படி இந்த இரு திட்டங்களின் கீழ் இருந்த சொத்துக்களின் மொத்த மதிப்பு 4.83 லட்சம் கோடி. தேசிய பென்ஷன் திட்டத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை கடந்த ஜூலை மாதத்தில் 4.42 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 3.57 கோடியாக இருந்தது. இந்த அறிவிப்பை பென்சன் நிதி ஒழுங்கு மற்றும் வளர்ச்சி ஆணையம் நேற்று வெளியிட்டது.