பென்ஷன் வாங்கக்கூடிய மூத்த குடிமக்களுக்கு தேவையான வாழ்வு சான்றிதழை இனி அவர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது. அதன்படி டிஜிட்டல் முறையில் வாழ்வு சான்றிதழை பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தொழில்நுட்பம் பற்றி முன் அனுபவம் இல்லாத ஓய்வூதியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் மிக எளிதாக வாழ்வு சான்றிதழை பெற்றுக் கொள்ளும் வகையில் தபால்துறை இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இதுபற்றி தபால் துறை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மூத்த குடிமக்கள் இனி அருகில் உள்ள தபால் நிலையங்களில் இருக்கும் பொது சேவை மையத்தில் மிக எளிதாக ஜீவன் பிரமாண பத்திரம் தொடர்பான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்” என்று கூறியுள்ளது. பென்ஷன் பெறுவதற்கு தேவையான வாழ்வு சான்றிதழை பெற வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட ஓய்வூதியர் நேரடியாக வர வேண்டிய தேவை இருந்தது.
அதனால் அவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.இந்நிலையில் அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் இனி அருகில் உள்ள தபால் அலுவலகத்துக்கு சென்று வாழ்வு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் எங்கும் அலைய வேண்டிய அவசியமும் இல்லை. இது ஓய்வூதியர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.