பென்னாகரம் சட்டமன்ற தொகுதி தென்னகத்தின் நயாகரா என்று அனைவராலும் அழைக்கப்படும் புகழ்பெற்ற ஒகேனக்கல் பாப்பாரப்பட்டி, ஏரியூர், நாகமரை பெரும்பாலை ஆகிய ஊர்கள் இடம்பெற்றுள்ளன. பென்னாகரம் 1951ஆம் ஆண்டு சட்டமன்ற தொகுதியாக உருவாக்கப்பட்டது. இதுவரை 5 முறை திமுக வென்றுள்ளது. கடந்த 2016 தேர்தலில் திமுக சார்பில் பி.என்.பி இன்பசேகரன் போட்டியிட்டு வென்றார். பென்னாகரம் தொகுதியில் மொத்தம் 2,40,647 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களே இத்தொகுதியில் அதிகம்.
நீண்ட நாள் கோரிக்கையான காவிரி உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடம் உள்ளது. ஓட்டலுர் பரிசல் துறையில் இருந்து காவிரி ஆற்றின் குறுக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ள உயர்மட்ட பாலம் அமைப்பதன் மூலம் கோவை திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களுக்குச் செல்ல எளிதாக இருக்கும் என மக்கள் கூறுகின்றனர். ஒகேனக்கல் சுற்றுலா மையத்தை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சிட்கோ தொழிற் பேட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் பணியமர்த்தி தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும் என்பது பென்னாகரம் தொகுதி மக்கள் வேண்டுகோள். எதிர்க்கட்சி சட்ட மன்ற உறுப்பினர் என்பதால் பென்னாகரம் தொகுதியை அரசு முற்றிலும் புறக்கணித்து இருப்பதாக எம்.எல்.எ இன்பசேகரன் குற்றம் சாட்டியுள்ளார். நீண்ட கோரிக்கைகளையும் தீர்க்கப்படாத பிரச்னைகளையும் முன்வைத்து காத்திருக்கிறார்கள் பென்னாகரம் தொகுதி மக்கள்.