அனைவருமே வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்க விரும்புகின்றனர். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வேலை நேரத்தில் சம்பளம் கிடைக்கும். ஓய்வு பெற்ற பின் ஓய்வூதியம் உண்டு. ஆனால் தனியார்துறையில் இந்த வசதிகள் இல்லை. தனியார் துறையில் பணியாற்றி வருபவர் எனில், ஓய்வுக்குப் பின் நிதிப் பாதுகாப்பை திட்டமிட தேசிய ஓய்வூதியத் திட்டம் பெரிதும் உதவும். இத்திட்டம் வருமான வரிச் சேமிப்பின் பலன்களைத் தருவது மட்டுமல்லாது வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் மாதந்தோறும் ஒரு நிலையான தொகைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
முறையான வழிகாட்டுதலுடன் இத்திட்டத்தில் முதலீடு செய்தால், மாதந்தோறும் 50ஆயிரம் ரூபாய் வரையிலும் ஓய்வூதியம் பெற்று வரலாம். தேசிய ஓய்வூதியத் திட்டம் நீண்டகால முதலீடாகக் கருதப்படுகிறது. இவற்றில் நீங்கள் ஒரு வேலையினைச் செய்யும் போது சிறிது பணத்தை தொடந்து டெபாசிட் செய்தால், அது உங்களுக்கு ஓய்வுக்குப்பின் சிறந்த பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் முதலீட்டாளர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் டெபாசிட்செய்த பணத்தை இருவழிகளில் பெற்று வருகின்றனர். நீங்கள் அவற்றில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒரே நேரத்தில் திரும்பப்பெறலாம். மீதம் உள்ள தொகை வருடாந்திர ஓய்வூதியத்திற்காக டெபாசிட் செய்யப்படும். ஆண்டுத் தொகையாக பெற எவ்வளவு தொகை அவற்றில் எடுக்காமல் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அதிகமான தொகை ஓய்வுக்குப் பின் ஓய்வூதியமாக கிடைக்கும்.
NPS கணக்குகளின் வகைகள்
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் 2 வகையான கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. அதில் முதல் வகை கணக்கு NPS அடுக்கு 1 எனவும் 2வது வகை கணக்கு NPS அடுக்கு 2 எனவும் அழைக்கப்படுகிறது. இதனிடையில் ஒரு நபர் ஓய்வூதிய பயன்களைப்பெற விருப்பப்பட்டால், அடுக்கு1 கணக்கை துவங்கவேண்டும். அடுக்கு 1 கணக்கு முக்கியமாக PF டெபாசிட் செய்யாதவர்களுக்கும், ஓய்வுக்குப் பின் நிதிப்பாதுகாப்பை விரும்புபவர்களுக்கும் ஆகும்.
இவ்வகை கணக்கு அதாவது NPS அடுக்கு 1 திட்டம் ஓய்வூதியத்திற்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் நீங்கள் ஒருகணக்கைத் திறப்பதற்கு குறைந்தபட்சம் ரூபாய்500 டெபாசிட் செய்யலாம். ஓய்வுக்குப்பின் ஒரே நேரத்தில் 60 சதவீத தொகையை எடுக்கலாம். மீதம் உள்ள 40 % ஓய்வூதியம் பெறக்கூடிய அடிப்படையில் முதலீடாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இது மாதாந்திர ஓய்வூதிய வடிவத்தில் வழக்கமான வருமான ஆதாரத்தை உறுதிசெய்கிறது.
NPS கணக்கைத் திறப்பதற்கான வழிமுறைகள் என்ன?
# NPS அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்.
# பின் பதிவு ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும்.
# ஆதார் ஆப்ஷனுடன் பதிவு என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
# OTP-ஐ சரிபார்க்க வேண்டும்.
# பொருத்தமான அனைத்து விவரங்களையும் நிரப்பவேண்டும்.
# அதன்பின் பணத்தை செலுத்த வேண்டும்.
# பணம் செலுத்தும் செயல்முறையை முடித்தபின், உங்களது பெயரில் கணக்கு திறக்கப்படும்.