Categories
தேசிய செய்திகள்

பெய்ரூட் வெடிவிபத்து… காரணம் யார்?… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு பெய்ரூட் நீதிமன்றம் தான் காரணம் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கின்ற துறைமுகத்தில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்து அந்த நகரையே பெரும் சேதப்படுத்தியுள்ளது. ‌ வெடிவிபத்து ஏற்பட்ட சில மணித்துளிகளிலையே அந்த இடம் முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேலும் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. துறைமுகப்பகுதி முழுவதுமாக தரை மட்டமானது. இந்த வெடிவிபத்தில் தற்போது வரை 157 பேர் பலியாகியுள்ளனர். அதே சமயத்தில் 5 ஆயிரத்திற்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர். மேலும் துறைமுகத்தில் இருக்கின்ற சேமிப்பு கிடங்கில் கடந்த 6 ஆண்டுகளாக பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 2750 டன் அளவுடைய வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருட்களால் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் துறைமுக சேமிப்பு கிடங்கில் இருக்கின்ற அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்துவதற்கு உத்தரவிட  நீதிமன்றத்திற்கு சுங்கத் துறை தரப்பில் கடிதம் மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் அந்த கடிதத்திற்கு எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்ற தகவல் அம்பலமாகியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு 2,750 டன் அளவுடைய அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருட்களுடன் சரக்கு கப்பல் துறைமுகத்திற்கு வந்தது. அப்போது கப்பலில் ஏற்பட்ட கோளாறால், அதில் வைக்கப்பட்டிருந்த வேதிப் பொருள்கள் அனைத்தும் துறைமுகத்தின் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டது.

அதன்பிறகு சேமிப்பு கிடங்கில் இருந்த வேதிப்பொருளின் ஆபத்தை கருத்தில்கொண்டு சுங்கத்துறை அதிகாரிகள் அமோனியம் நைட்ரேட்டை துறைமுகத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு 2014-2017 வரையில் ஆறு முறை கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தக் கடிதத்தில் அமோனியம் நைட்ரேட் மிகுந்த ஆபத்து கொண்ட வேதிப்பொருள் எனவும், இதனை ஏற்றுமதி செய்யவோ, மறு விற்பனை செய்யவோ அல்லது ராணுவத்திடம் ஒப்படைக்கவோ அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இருந்தாலும் சுங்கத் துறையின் கடிதங்களுக்கு பெய்ரூட் நீதிமன்றத்திலிருந்து எந்த ஒரு பதில் கடிதமும் வரவில்லை. சுங்கத்துறை அனுப்பிய கடிதங்களுக்கு நீதிமன்றம் ஏதாவது உத்தரவு பிறப்பித்திருந்தால் இந்த வெடி விபத்தை கட்டாயம் தடுத்திருக்கலாம். ஆனால் சுங்கத்துறை அனுப்பிய அனைத்து கடிதங்களுக்கும் நீதிமன்றம் பதிலளிக்காமல் அலட்சியப்படுத்தியதே இந்த கொடூர வெடி விபத்திற்கு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Categories

Tech |