பெரம்பலூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் இதுவரை ரூ. 45 லட்சத்து 39 ஆயிரம் 28 பேரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் நடைபெறாமல் தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கவும் குன்னம், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒன்பது தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரும், ஒன்பது பறக்கும் படை குழுவினரும், 2 வீடியோ கண்காணிப்பு குழுவினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துறைமங்கலம் மற்றும் செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் தேர்தல் கண்காணிப்பு குழுவினரின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஸ்ரீவெங்கடபிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தேர்தல் கட்டுப்பாட்டு மையத்திற்கு 1,327 புகார்கள் வரப்பெற்றது. குன்னம் சட்டமன்ற தொகுதியில் இதுவரை 17 புகார்களும், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் மூலம் இதுவரை 40 புகார்களும் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் மூலம் இதுவரை ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 45 லட்சத்து 39 ஆயிரத்து 340 ரொக்கப்பணம் 28 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 16 பேருக்கு தகுந்த ஆவணங்கள் சமர்ப்பித்த பிறகு ரூ.30 லட்சத்து 39 ஆயிரத்து 230 ரொக்கப்பணம் திருப்பி வழங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் ஒருவரிடமிருந்து 29 துண்டுகளும், 2 பேரிடம் இருந்து 185 மதுபாட்டில்களும், ஒருவரிடமிருந்து 1,474 கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.