பெரம்பலூரில் வாகன சோதனையின் போது ஆவணம் இல்லாமல் சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், பெரம்பலூர் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பார்வையாளர் அரவிந்த் ஜி.தேசாய் தலைமையில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்கண்ணு, மற்றும் சரவணன், புஷ்பா, மெர்சி ஆகிய காவல்துறையினர் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் எக்ஸ் ரோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சரக்கு வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில் சரக்கு வாகனத்தில் ரூ. 2 லட்சத்து 12 ஆயிரத்து 80 கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சரக்கு வாகனத்தில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் கிராமத்தில் வசித்து வரும் அசோக்குமார் என்பது தெரியவந்தது. மேலும் பணத்திற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜாவிடம் ஒப்படைத்தனர்.