பெரம்பலூர் அருகே அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சூரை திருவிழா நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோவில் சுவேத நதிக்கரையில் உள்ளது. மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று இந்த கோவிலில் சூரை திருவிழா நடைபெற்றது. இதையடுத்து காலை 7 மணிக்கு கோவிலில் இருந்து காளி புறப்பாடு நடைபெற்றது. அதன் பின் 10 மணிக்கு குடல் பிடுங்கி மாலையிடுத்தல் நிகழ்ச்சி, வள்ளால ராஜன் கோட்டை மிதித்தல் போன்றவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பாளையம் அருகே மயானத்துக்கு ஊர்வலமாக சென்றார்.
பாளையம் அருகே தோப்பு பகுதியில் உள்ள மயானத்தில் சாமி சிலைக்கு முன் அரிசி சாதம் படையல் இடப்பட்டிருந்தது. அதில் கிடா வெட்டிய இரத்தத்தை கலந்து சாதத்தை அள்ளி வீசினர். அங்கு நின்று கொண்டிருந்த ஏராளமான பக்தர்கள் மடியேந்தி அந்த சாதத்தை பெற்று உண்டனர். இந்த சாதத்தை உண்டால் குழந்தைப் பேறு கிடைக்கும், திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணமாகும் என்பது ஐதிகம். இதனால் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். அங்கு அருள் வந்து சாமி ஆடியவர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட கோழியின் ரத்தத்தை உறிஞ்சி குடித்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு ஊர்வலம் நடந்தது. சூரை விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று இரவு 10 மணி அளவில் வீரபத்திரர் சுவாமி ஊர்வலம் நடைபெற இருக்கிறது. அதேபோல் மாலை 4 மணி அளவில் பொங்கலிடுதல், மாவிளக்கு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இரவு 10 மணிக்கு பக்தர்கள் வேடமணிந்து மேள,தாளத்துடன் அம்மன் ஊர்வலம் நடைபெறுகிறது. மயானக்கொள்ளை நடந்த இடத்தில் பெண்கள் தண்ணீரில் தலை முழுகி, ஈரத்துணியுடன் முழங்காலிட்டு காத்திருந்தனர். அவர்களை காளி வேடம் அணிந்து வருபவர்கள் முறத்தால் அடித்து மந்திரம் கூறினர். மேலும் மனித எலும்பை பெண்களின் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்துள்ளனர்.