விவசாய தொழில் சூழ்நிலை சரியில்லை என்பதால் ஹெலிகாப்டர் வாங்குவதற்காக விவசாயி ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், தக்டோடா கிராமத்தை சேர்ந்த கைலாஷ் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது . ஆனால் சரியான மழை இல்லாத காரணத்தினாலும், வரட்சியின் காரணத்தினாலும் சில ஆண்டுகளாக விவசாயம் என்பதே கடினமாகி விட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சோளம் சாகுபடி செய்துள்ளார். ஆனால் பருவமழை இல்லாததால் நல்ல வருமானம் கிடைக்கவில்லை.
பயிர் காப்பீட்டில் கிடைக்கும் பணமும் போதவில்லை என்கிறார். இதையெல்லாம் பரிசீலித்த பிறகு புதிய தொழில் தொடங்கி சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். இதனால் அவர் தேர்ந்தெடுத்த தொழில் தான் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஹெலிகாப்டர் வாங்குவதற்கு அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக 6.5 கோடி கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். மற்ற தொழில்களில் போட்டி அதிகம் என்பதால் இந்த தொழிலை தேர்வு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் . பணக்காரர்கள் மட்டும் தான் பெரிதாக கனவு காண வேண்டும் என சட்டம் இல்லை, விவசாயிகளுக்கும் பெரிதாக கனவு காண வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.