கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயத்தை நம்பி ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பலர் விவசாயம் செய்வது மட்டுமல்லாமல் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார்கள். மாவட்டம் முழுவதும் சுமார் 4 லட்சம் மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாடுகளை பெரிய அம்மை நோய் தாக்கி வருகின்றது. இதற்காக கால்நடை பராமரிப்பு துறை மூலமாக பெரிய அம்மை பாதிக்கப்பட்டு வரும் கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்த போதிலும் நோய் தீவிரமாக பரவி வருகிறது. ‘
இந்த நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாடுகளில் பால் சுரப்பது குறைந்து இருக்கிறது. மேலும் பல மாடுகள் இறக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றது. மாவட்டம் முழுவதும் மாடுகளுக்கு போதிய தடுப்பூசி இல்லாத காரணத்தினால் தனியார் மருத்துவமனைகளில் வாங்கி கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் போடுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அதேபோல் நோய் பரவல் காரணமாக இந்த வருடம் தீபாவளி பண்டிகை கொண்டாடவில்லை எனவும் அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். மேலும் போதிய தடுப்பூசிகளை கால்நடை துறை சார்பில் வழங்கி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.