பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்கு வருகை புரிந்தார். அப்போது சிலைக்கு கீழே ஒரு பெரியார் படம் வைக்கப்பட்டு அதற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
அதன்பிறகு சற்று நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்த வருவதை அறிந்த எடப்பாடி ஆதரவாளர்கள் பெரியார் படத்தை கையோடு எடுத்துச் சென்றனர். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் வர உள்ள நிலையில் அமமுகவினர் கொண்டு வந்த பெரியார் படம் அவருடைய சிலை அருகில் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அமமுகவினர் கொண்டு வந்த பெரியார் படத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.