சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கலைஞர் பெயரால் மாளிகை அமைந்திருக்கும் இடம்தான் இந்த ராணி மேரி கல்லூரி. பெருமை மிகு இந்த கல்லூரியின் 104 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உங்களுக்கு பட்டங்களை வழங்குவது எனக்கு கிடைத்த பெருமை. 21 துறைகளைச் சார்ந்த 3,259 மாணவிகள் பட்டம் பெறுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது தான் எனக்கு இரட்டடிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
உடல் உழைப்பு வேலைகளை மட்டும் பார்க்கலாம் என்ற நிலைமை 100 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது. பெண்களின் நிலைமை இதைவிட மோசமாக இருந்தது. நீதி கட்சி ஆட்சி வந்து இந்த நிலை மாற தொடங்கியது. அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட காலத்தில் சமையல் கரண்டியை பிடித்திருக்கும் கையில் புத்தகத்தை கொடுங்கள் என்று சொன்னவர் ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள். அவரைப் போன்ற சீர்திருத்தவாதிகளால் தான் பெண் சமூகத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றம் நிகழ தொடங்கியது.
அந்த காலத்தில் 8 வயது, 10 வயது பெண் குழந்தைகளுக்கு எல்லாம் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். குழந்தை திருமணங்களை குற்ற செயல் என்று சட்டம் போட்டிருக்கிறோம். இந்த நிலைமையை நாம் சாதாரணமாக அடைந்து விடவில்லை, எத்தனையோ மதம், கலாச்சாரம் என்ற பெயரில் முட்டுக்கட்டைகளை கடந்து தான் இதை அடைந்திருக்கிறோம்.
இந்த அரங்கில் இன்று நாம் காணும் இந்த காட்சி நூற்றாண்டு கால போராட்டத்தினுடைய விளைவு தான். இங்கே உங்களை காணுகிற காட்சி, பட்டத்தை இன்று வாங்கி இருக்க கூடியவர்களை பார்க்கின்ற காட்சி. அதனால்தான் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகிய நீங்கள் உங்களுக்கு அடுத்து வரும் தலைமுறைகளை படிக்க வைக்க வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.