முல்லை பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் கேரள வழக்கறிஞரை கண்டித்து 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக-கேரள எல்லையான தேக்கடியில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து தமிழகத்தில் தேனி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த வக்கீல் ரசூல் ஜோய் என்பவர் சமூக வலைதளங்களில் முல்லை பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். முல்லை பெரியாறு அணை கட்டப்பட்ட நூற்றாண்டை கடந்ததால் மிகவும் பலவீனமான நிலை இருப்பதாகவும், இந்த அணை உடைந்தால் லட்சகணக்கான மக்கள் பலியாவார்கள் எனவும் கூறியுள்ளார்.
இது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே முல்லை பெரியாறு அணை குறித்து இதுபோல் அவதூறான கருத்துக்களை பரப்பி வரும் வழக்கறிஞர் ரசூல் ஜோயை கண்டித்து ராமநாதபுரம், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்கத்தினர் இணைந்தது தேனி சின்னமனூர் பகுதியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு 5 மாவட்டத்தினுடைய விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஆர்பாட்டத்தில் கேரள அரசை கண்டித்தும், ரசூல் ஜோயை கண்டித்தும் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.