சிதம்பரம் அருகே வல்லம்படுகை கொள்ளிடம் கரையோரம் எருக்கன்காட்டு படுகை, கருப்பூர், நளம் புத்தூர், ஒட்டரபாளையம், முள்ளங்குடி, கீழப்பருத்தி குடி, மேல பருத்திக்கொடி, வெள்ளூர், மா.அரசூர், சி.அரசூர், புளியங்குடி, வாண்டையார் இருப்பு போன்ற 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் சாலை மற்றும் பேருந்து வசதி இல்லை. இந்த வசதி செய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். இருப்பினும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று காலை 11 மணிக்கு வல்லம்படுகை கொள்ளிடம் சோதனை சாவடி அருகே வல்லம்படுகை சீர்காழி சாலையில் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றது. மேலும் போக்குவரத்து பாதிப்பினால் பேருந்தில் வந்த பயணிகள் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்ட் ரமேஷ் ராஜ், தாசில்தார் ஹரிதாஸ், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகள் மூன்று மாதத்திற்குள் சாலை மற்றும் பேருந்து வசதி ஏற்படுத்தித் தருவதாக உறுதி அளித்துள்ளனர். அதற்கு பொதுமக்கள் மூன்று மாதத்திற்குள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் வல்லம்படுகை சீர்காழி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.