ஈரோடு மாவட்டத்தில் பைராபாளையம் பகுதியில் செல்வகணபதி, பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களாக புணரமைப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்த பணிகள் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 26 ஆம் தேதி காலை மகா கணபதி ஹோமமும் நவகிரக ஹோமமும் நடத்தப்பட்டு கும்பாபிஷேக விழா தொடங்கப்பட்டது.
இதனை அடுத்து பகலில் காவிரி ஆற்றுக்கு சென்ற புனித நீர் எடுத்து வந்து பின்னர் மாலையில் மாவிளக்கு எடுத்து வரும் பூஜையும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் யாக கால பூஜை, துவார பூஜையும் நடத்தப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் கோபுர கலசங்களுக்கு சிவாசாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்துள்ளனர். அதன்பின் பக்தர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டுள்ளது. இந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றுள்ளனர்.