மோசடி நடந்ததாக கூறி பொதுமக்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள சுக்காங்கல்பட்டியில் கோபால்நாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் கடன் சங்கத்தில் அடகு வைத்த நகைகள் கூடுதல் தொகைக்காக தனியார் அடகு கடையில் வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு நோட்டீஸ் ஒன்று வந்ததுள்ளது.
இதுகுறித்து நகையை அடகு வைத்த பொதுமக்கள் விளக்கம் கேட்பதற்காக கூட்டுறவு சங்கத்திற்கு சென்றனர். ஆனால் அலுவலக நிர்வாகிகள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உத்தமபாளையம் தாசில்தார், ஓடைப்பட்டி காவல்துறையினர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது கூட்டுறவு கடன் சங்கத்தில் வைத்த நகைகளை திருப்புவதற்காக சென்றால் அதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும், நகை குறித்த விவரங்களையும் சரியாக கூறுவது இல்லை , அலுவலகத்தில் மோசடி நடந்த்துள்ளதாகவும் புகார் அளித்துள்ளனர். இதனை கேட்டறிந்த காவல்துறையினர் கடன் சங்க அதிகாரிகளிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், சந்தேகம் உள்ளவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர். இதன் பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து களைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.