கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோமளவல்லி தாயார் சமேத யதோக்தகாரி பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் பங்குனி பிரம்மோற்சவம் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கருட வாகனத்தில் யதோக்தகாரி பெருமாள் வீதி உலா வரும் காட்சி 3ஆம் நாளிலும், யதோக்தகாரி பெருமாள் திருத்தேரில் எழுந்தருளும் காட்சி 7ஆம் நாளிலும் நடைபெற்றது.
திருக்கோயில் வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் நேற்று தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது. அந்த திருக்குளத்தில் பெருமாள் தீர்த்தவாரி எழுந்தருளிய பிறகு பக்தர்கள் அனைவரும் நீராடினர். பரம்பரை தர்மகர்த்தா நல்லப்பா நாராயணன் தலைமையில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.