கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அருகில் ஏ. குச்சிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் குணால். இவருடைய மனைவி 19 வயதுடைய ஹரிப்பிரியா. இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆகிறது. குணாலின் தங்கை 19 வயதுடைய நவநீதா டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். குணாலின் வீட்டிற்கு அவருடைய சொந்தக்காரர்களான அயன் குறிஞ்சிப்பாடியில் வசித்த ராஜகுருவின் மகள்கள் 13 வயதுடைய பிரியதர்ஷனி, 11 வயதுடைய காவியா ஆகிய 2 பேரும் கோடை விடுமுறைக்காக வந்துள்ளார்கள். பிரியதர்ஷினி பத்தாம் வகுப்பும், காவியா ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார்கள்.
குணாலின் வீட்டின் அருகில் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைந்துள்ளது. இந்த தடுப்பணை அருகே தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிப்பதற்கு நவநீதா, ஹரிபிரியா, பிரியதர்ஷினி, காவியா ஆகிய நான்கு பேரும் சென்றார்கள். அவர்களுடன் குணாலின் சொந்தக்காரர்களான அமர்நாத் மகள் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி 16 வயதுடைய மோனிஷா, சங்கர் மகள் 15 வயதுடைய செவிலியர் சங்கவி, முத்துராமன் மகள் 18 வயதுடைய சுமதா ஆகிய 3 பேரும் சென்றுள்ளார்கள். முதலில் ஆற்றில் இறங்கி ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, நவநீதா, காவியா ஆகிய 4 பேரும் குளித்தார்கள். மற்ற மூன்று பேரும் கரையில் இருந்தார்கள்.
அப்போது நான்கு பெரும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார்கள். நீச்சல் தெரியாமல் தத்தளித்து சத்தம் போட்டார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மூன்று பேரும் அவர்களைக் காப்பாற்றுவதற்கு ஆற்றில் இறங்கிய போது அவர்களும் சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் திணறினார்கள். உடனே அவர்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டார். அதற்குள் ஒருவருக்கொருவர் காப்பாற்ற முடியாமல் ஆற்றுக்குள் மூழ்கினார்கள். இந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்த இளைஞர்கள் ஓடி சென்று அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தார்கள். ஆனால் ஏழு பேரும் தண்ணீரில் மூழ்கினார்கள்.
இதனை அடுத்து இளைஞர்கள் ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்கள் ஏழு பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இத்தகவலை அறிந்த குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 7 பேரின் உடலை பார்த்து கதறி அழுதார்கள். இந்த சம்பவம் காண்போரின் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்துள்ளது. மேலும் இதுகுறித்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கடலூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில் அமைச்சர் எம். ஆர். கே பன்னீர்செல்வம், கலெக்டர் பாலசுப்பிரமணியம், மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று 7 பேரும் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ 25,000 நிவாரண உதவியாக ஏழுபேரும் குடும்பங்களுக்கும் கொடுத்தார். இதனை அடுத்து அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் நிரூபர்களிடம் கூறியதாவது, குளிக்கச் சென்ற 7 பேரும் பலியான சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் 7 பேரும் இறந்த இடத்தில் பள்ளம் உள்ளதா? மண்ணின் தன்மை எப்படி இருக்கு என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இந்த சம்பவம் குறித்து நெல்லிகுப்பம் காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, கெடிலம் ஆற்றங்கரையில் குளிக்கச் சென்ற 7 பேரும் மூழ்கி பலியான சம்பவம் கேள்வியுற்று எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்சம் நிவாரண உதவி தொகை வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.