10 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் நாட்டில் தெற்கு பகுதியில் அபடான் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் அமீர் கபீர் தெருவில் அமைந்துள்ள 10 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் பிற நகரங்களில் இருந்தும் அவசரகால குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனை அடுத்து 2 மோப்ப நாய் குழுக்கள், 1 ஹெலிகாப்டர் மற்றும் 7 மீட்பு வாகனங்களுடன் மீட்பு பணி தொடங்கியது.
இந்நிலையில் அந்த பகுதியில் வசித்து வருகின்ற மக்கள் நகர அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர். அவர்களை அமைதிப்படுத்தி விட்டு அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஈராக்கை ஒட்டிய எல்லை பகுதியில் அமைந்துள்ள இந்த கட்டிடத்தில் வணிகத்திற்கான கடைகள் அமைந்துள்ளதுடன், குடியிருப்புவாசிகளும் வசித்து வந்துள்ளனர். இந்த கட்டிட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு 80 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ள குஜஸ்தான் மாகாண நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.