Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்…தாய் கண்முன்னே நடந்த பரிதாபம்… வாய்க்காலில் தவறி விழுந்து அக்கா,தம்பி பலி …!!

பெருந்துறை அருகே  வாய்க்காலில் தவறிவிழுந்து  அக்கா – தம்பி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்து காஞ்சிக்கோவில் திருமூர்த்தி நகரில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி கோவிந்தராஜ் (40). இவருடைய மனைவி சாவித்திரி என்ற சந்தியா தேவி (32). இந்த தம்பதிகளுக்கு 10 வயதுடைய கீர்த்தனா என்ற மகளும், 3 வயதுடைய பரணீதரன் என்ற மகனும் இருந்துள்ளார்கள். கீர்த்தனா ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை சாவித்திரி துணி துவைப்பதற்காக காஞ்சிக்கோவில் அருகில் சூரியன் காடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு தன்னுடைய மகனையும், மகளையும் அழைத்து சென்றுள்ளார். அதன் பின்னர் சாவித்திரி வாய்க்கால் படிக்கட்டில் அமர்ந்து துணி துவைத்துக் கொண்டிருந்தார். வாய்க்காலின் கரை ஓரத்தில் கீர்த்தனாவும் பரணீதரனும் அமர்ந்திருந்தார்கள்.

அப்போது அந்த கரை சரிவாக இருந்ததால் திடீரென்று எதிர்பாராமல் 2 பேரும் வாய்க்காலில் தவறி விழுந்தனர். வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக வந்ததால் 2 பேரையும் அடித்து சென்றது.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாவித்திரி உடனே தனது குழந்தைகளை காப்பாற்ற அவரும் வாய்க்காலுக்குள் இறங்கினார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால் தனது பிள்ளைகளை காப்பாற்ற முடியவில்லை.

இதனால் தன்னை காப்பாற்றிக்கொள்ள கரையோரம் வளர்ந்துள்ள செடி, கொடிகளை பிடித்துக்கொண்டு காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டார். இந்த சத்தத்தை கேட்டு அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அங்கு வந்து மயங்கிய நிலையில் இருந்த சாவித்திரியை மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட கீர்த்தனா, பரணீதரன் உடலை பொதுமக்கள் தேடும் முயற்சியில் ஈடுபட்டபோது கண்ண வேலம்பாளையம் அருகில் கீர்த்தனாவின் உடலை மீட்டனர். அதன்பின் பரணீதரன் உடலை தேடி கொண்டிருக்கிறார்கள். ஆனால் இரவு வரை தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடிக் கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த பெருந்துறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றார். தாய் கண் முன்னே வாய்க்காலில் தான் பெற்ற இரண்டு குழந்தைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |