மதுரை விளாங்குடி முத்துமாரியம்மன் கோவில் தெருவில் சேர்ந்த தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி இருவரும் கூலித்தொழில் செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் பிரபாகரன் (14). ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். இரண்டாவது மகன் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றான். இந்த நிலையில் நேற்று காலை பிரபாகரன் பள்ளிக்கூடம் செல்வதற்காக அரசு டவுன் பஸ்ஸில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் உள்ளே செல்ல முடியாமல் பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் பயணித்தபடி சென்றிருக்கின்றான்.
இந்த நிலையில் அந்த பேருந்து டிடி ரோடு வழியாக ஆரப்பாளையம் நோக்கி சென்றுள்ளது. இதில் மாணவன் பிரபாகரன் திடீரென நிலை தடுமாறு கீழே விழுந்துள்ளான். கண்ணிமைக்கும் நொடியில் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கியதால் தலை மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது மேலும் உயிருக்கு போராடிய அந்த சிறுவனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியில் பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மதுரை நகரில் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இருப்பினும் மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்வது தொடரத்தான் செய்கின்றது அதனால் போலீஸர் இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கின்றது.