அம்மன் கழுத்தில் இருந்து நகையை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம்-திருச்சி சாலையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்தனர். இந்நிலையில் வாலிபர் ஒருவர் சாமியை தரிசனம் செய்வது போல் உள்ளே சென்று அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த தங்கத்தால் ஆன பொட்டு தாலியை அறுத்து கொண்டு ஓடியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அந்த வாலிபரை பின்தொடர்ந்து ஓடினர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை. மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அம்மன் கழுத்தில் இருந்து பொட்டு தாலியை பறித்து சென்றது கரூரை சேர்ந்த செல்லதுரை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் செல்லத்துரையை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.