ஆட்டோ ஓட்டுநரை காரில் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள புது காலனி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான மெகபூர் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது ஆட்டோவில் அதே பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேரை திண்டல் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த 3 பேரும் சேர்ந்து மெகபூர் பாஷாவை தாக்கி காரில் கேரள மாநிலத்திற்கு கடத்தி சென்றுள்ளனர். இந்நிலையில் வாளையார் சோதனை சாவடி அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனை பார்த்த அவர்கள் காரை அங்கயே நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அதில் ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த செரீப் என்பதும், காரில் மெகபூர் பாஷாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த செரீப்பை கைது செய்து மெகபூர் பாஷாவை மீட்டனர். இதுகுறித்து மெகபூர் பாஷா கூறியதாவது. நான் கேரள மாநிலத்தை சேர்ந்த இர்வான்- சோனி தம்பதியினரை ஆட்டோவில் சவாரிக்கு அழைத்து சென்றேன். இதன் மூலம் எனக்கும் அவர்களுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. இந்நிலையில் இர்வான் செரீப்பிடம் இருந்து 1 லட்ச ரூபாய் கடன் வாங்கினார். அதில் 50 ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்தி விட்டார். ஆனால் மீதமுள்ள தொகையை அவர் செலுத்தவில்லை. இதனால் செரீப் ஈரோட்டுக்கு இர்வானை தேடி வந்தார். ஆனால் அவர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனால் அவர்களை வரவழைப்பதற்காக என்னை இவர்கள் கடத்தி வந்தனர் என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.