பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்து எரித்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தென்னந்தோப்பில் கடந்த 29-ஆம் தேதி ஒரு பெண்ணின் பிணம் கழுத்தில் தாலியுடன் பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சிவப்பிரசாத் குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் காணாமல் போன இளம் பெண்களின் பட்டியலை சேகரித்தனர். மேலும் எரிந்த நிலையில் இருந்த அந்த பெண்ணின் புகைப்படத்தை சுவரொட்டிகளில் ஒட்டினர். இந்நிலையில் ஒரு பெற்றோர் கழுத்தில் இருக்கும் தாலியை பார்த்து இது தங்கள் மகள் என காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் பெயர் ராஜாத்தி என்பதும், இவருக்கு திருமணம் முடிந்து 9 மாதத்தில் கைக்குழந்தை இருப்பதும் தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் சென்னையில் இருந்த ராஜாத்தியின் கணவரான அர்ச்சுனன் என்பவரை அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அர்ச்சுனனுக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி மனைவிகள் பிரிந்து சென்று விட்ட நிலையில், 3-வதாக ராஜாத்தியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.இந்நிலையில் அர்ச்சுனனுக்கும் அவரது மனைவி ராஜாத்திக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ராஜாத்தியை கொலை செய்ய அர்ச்சுனன் முடிவு செய்துள்ளார். இதனையடுத்து அர்ச்சுனன் கடந்த 28-ஆம் தேதி சொந்த ஊருக்கு செல்வதாக கூறி பேருந்தில் பள்ளப்பட்டி பகுதிக்கு ராஜாத்தியை அழைத்து வந்துள்ளார். அதன் பின்னர் அர்ச்சுனன் தனது தாய், தந்தை உள்ளிட்ட 5 பேருடன் சேர்ந்து தென்னந்தோப்பில் வைத்து ராஜாத்தியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். மேலும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக ராஜாத்தியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அர்ச்சுனன், அவரது தந்தை ராசு உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர்.