கிணற்றில் தவறி விழுந்த லாரியை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் லாரி ஓட்டுநரான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று கரகத அள்ளி பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலத்திற்கு தனது லாரியில் மண் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் மண்ணை போட்டுவிட்டு லாரியை பின்னோக்கி எடுத்துள்ளார். அப்போது திடீரென லாரி அருகில் இருந்த 20 அடி ஆழம் முள்ள கிணற்றில் விழுந்தது. இதனையடுத்து ராதாகிருஷ்ணன் சத்தம் போட்டு கதறியுள்ளார். இவரது கதறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி ராதாகிருஷ்ணன் மற்றும் லாரியை மீட்டுள்ளனர். இததையடுத்து படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.