மனைவியை கொலை செய்த வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குச்சிப்பாளையம் கிராமத்தில் கார் ஓட்டுநரான விஜயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேகனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் விஜயராஜ் குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில் தனது மனைவி மேகனாவை அடித்து கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால் விஜயராஜ் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவும், விஜயராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் விஜய்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.