கர்நாடகாவில் பெற்றோரின் கவனக்குறைவு காரணமாக எலி விஷம் தின்ற பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா என்ற நகரில் வசித்து வரும் சைஜூ என்பவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவரின் மனைவி தீப்தி. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஸ்ரேயா என்ற மகள் உள்ளார். அவர்களின் வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்த காரணத்தினால் எலி விஷம் ஒன்றை வாங்கி வீட்டில் நாய் கூண்டு அருகில் வைத்திருந்தனர். நாய்க்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த ஸ்ரேயா எலி விஷத்தை விளையாட்டாக எடுத்து வாயில் போட்டுக் சாப்பிட்டுள்ளார்.
இதனை வீட்டில் இருந்தவர்கள் யாரும் கவனிக்கவில்லை. இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் வாந்தி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். பின்னர் உடனடியாக பெற்றோர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின் கூடுதல் சிகிச்சைக்காக மங்களூரில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.