கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால் தற்போது மாணவர்கள் செல்போன் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் வியட்நாம் நாட்டின் நிகே அண் மாகாணத்தில் நாம் டென் மாவட்டத்தை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி மாலை ஆன்லைன் வகுப்பில் பாடம் படித்துக்கொண்டிருந்தார்.
அந்த மாணவர் மொபைலை சார்ஜ் போட்டவாறு காதுகளில் இயர் போனை மாட்டிக் கொண்டு பாடங்களை கவனித்து வந்துள்ளார். அப்போது மாலை 4 மணி அளவில் அந்த மாணவர் பயன்படுத்திய மொபைல் பேட்டரி அதிக சூடானதால் வெடித்து. அந்த விபத்தில் மாணவரின் உடலில் தீப்பற்றி எரிந்தது. உடனே மாணவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.