சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி வரை 354 குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதில் 10 குழந்தைகள் மட்டுமே டெங்கு பாதிப்புகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது மேலும் 139 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் பாதிப்பு எண்ணிக்கை 493 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது 41 பேர் சிகிச்சையில் உள்ளனர். குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் பாராசிட்டமால் தவிர வேறு எதுவும் கொடுக்கக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மாநில பச்சிளம் குழந்தைகள் நல அதிகாரி சீனிவாசன் இதுபற்றி கூறும்போது, குழந்தைகளுக்கு பாராசிட்டமால் தவிர வேறு மருந்துகள் கொடுத்தால் பிளேட்லெட் குறையும். தட்டணுக்கள் குறைந்துள்ளதா என்பதை ஐந்து நாட்களுக்கு பிறகுதான் கண்டறிய முடியும். ஆனால் முதல் இரண்டு நாட்களில் செய்யப்படும் ரத்தப் பரிசோதனை டெங்கு பாதிப்பு இருப்பதை உறுதி செய்யும். எனவே பாதிப்பு தீவிரம் அடையும் வரை காத்திருக்காமல் இரண்டாவது நாளிலேயே மருத்துவரை அணுகவேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.