உத்திரபிரதேசம் மாநிலத்தில் முதாரி கிராமத்தில் சுரேந்தர ரைக்வார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மே 30 அன்று தனது கர்ப்பிணி மனைவி சீமாவுடன் மஹேபா மாவட்டத்தில் உள்ள மகளிர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து மருத்துவர்கள் குழந்தையை பிறந்த குழந்தைக்கான சிறப்பு பிரிவில் அனுமதித்தனர். அந்த வார்டில் அழுக்கு மற்றும் எறும்புகள் இருப்பதாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்களிடம் புகார் அளித்தனர். ஆனால் அந்த புகார் மீது மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை எறும்பு கடித்து விட்டு இறந்து விட்டது என்று உறவினர்கள் தெரிவித்தனர். மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே குழந்தையின் மரணத்துக்கு காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும் மருத்துவர் ஒருவர் 6, 500 லஞ்சம் வாங்கியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து தகவலறிந்துகோட்வாலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.