இந்தியாவில் என்சிஆர்பி எனப்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் கடந்த வருடத்திற்கான ஆண்டறிக்கையை வெளியிட்டது. அதில் கடந்த 2020 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிராக 1,28,531 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில் சுமார் 38 சதவீதம் வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2021 ஆம் ஆண்டு பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 3,459 ஆகும். இதுவே வயது வாரியாக பார்க்கும்போது ஆறு வயதுக்கு உட்பட்ட 52 குழந்தைகள் பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 50 பெண் குழந்தைகள் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் அடங்கும். அடுத்ததாக ஆறு முதல் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 226 சிறுமிகளும் 16 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
16 வயதிற்கு உட்பட்டவர்களின் 1,389 சிறுமிகளும் 11 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 16-18 வயதுக்கு உட்பட்டவர்களில் 2,770 சிறுமிகளும் ஐந்து சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலான குழந்தைகளுக்கு தெரிந்தவர்கள் தான் பாலியல் துன்புறுத்தல்களை கொடுத்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு சிறார்களுக்கு எதிராக மொத்தம் 31,170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 4.7 சதவீதம் அதிகம் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் குழந்தைகள் கடத்தல் வழக்குகளும் 6000-க்கும் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாகவும் அவர்களை பாதுகாக்க சில தன்னம்பிக்கையான வழிகளையும் எடுத்துரைக்க வேண்டும் என்பதை இந்த ஆய்வு அறிக்கை உணர்த்துகிறது.