டெல்லியில் சாகச வீடியோக்களை பார்த்து அதில் உள்ளபடியே விளையாட முயன்ற 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயாரின் செல்போனை பார்த்து ஸ்கிப்பிங் விளையாண்ட போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியில் வசித்து வரும் 10 வயது சிறுவன் சாகச வீடியோக்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி கடந்த புதன்கிழமை இரவு 7 மணி அளவில் தனது தாயாரின் செல்போனை வாங்கி அதில் ஸ்கிப்பிங் எப்படி விளையாடுவது போன்ற வீடியோக்களை பார்த்துள்ளான்.
அதன்பிறகு வீடியோவில் உள்ள படியே ஸ்கிப்பிங் விளையாட முயற்சி செய்துள்ளான். பின்னர் அறைக்குள் சென்று ஸ்கிப்பிங் விளையாடி உள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்கிப்பிங் கயிறு சிறுவனின் கழுத்தில் மாட்டி இறுக்கியுள்ளது. இதில் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உள்ளான்.அதன் பிறகு நீண்ட நேரம் தனது மகனை காணவில்லை என்று தாயார் சிறுவனின் அறைக்குள் சென்று பார்த்தபோது, மகன் கழுத்தில் கயிறு இறுக்கி விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். தனது செல்போனை மகனுக்கு எமனாக மாறி விட்டதாக தாயார் கண்ணீர் வடித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் மூலமாக குழந்தைகள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.