நாகப்பட்டினம் அருகே நிலக்கடலை சாப்பிட்டு 2 வயது குழந்தை உயிருக்குப் போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் அருகே உள்ள பெரிய கண்ணமங்கலம் என்ற கிராமத்தில் அருண் மற்றும் கீர்த்தனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு வயதில் அனு மித்ரா என்ற மகள் இருக்கிறார். அவர் கடந்த 6ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நிலக்கடலை எடுத்து தின்று கொண்டிருந்தார். அப்போது நிலக்கடலையை வேகமாக சாப்பிட்டதால் நெஞ்சுப் பகுதியில் உள்ள உணவு குழாய் நிலக்கடலை சிக்கியது.
அதனால் குழந்தை மூச்சுவிட முடியாமல் மிகவும் திணறியது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறினர். அதன்பிறகு நாகை அரசு மருத்துவமனைக்கு சென்றபோது அங்கிருந்த மருத்துவர்கள் திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினர்.
அதன்பிறகு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. ஆனால் போகும் வழியில் குழந்தைக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே இருந்தது. மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு குழந்தை கடந்த 6ஆம் தேதி அழைத்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தைக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில், நுரையீரலின் வலது பக்கத்தில் நிலக்கடலை 3 துண்டுகளாக சிக்கி இருந்தது தெரியவந்தது.
அதன் பிறகு மருத்துவ குழுவினர் தீவிரமாக போராடி நிலக்கடலையை வெளியே எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றினர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தங்கள் குழந்தையை காப்பாற்றிய மருத்துவருக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.