திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றிமலை என்ற பகுதியில் பாக்கியராஜ்-காவேரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வைஷ்ணவி, சரண் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் காவேரி பனியன் நிறுவனம் ஒன்றில் தையல் தொழிலாளியாகவும், பாக்கியராஜ் பெயிண்டராகவும் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் வசித்து வரும் பகுதியான ஆலங்காட்டுபுத்தூரில் உள்ள அரசு பள்ளியில் வைஷ்ணவி 5-ஆம் வகுப்பும், சரண் 7-ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் பாக்கியராஜ் வேலைக்கு சென்று விட்டார். அதேபோல் காவேரி பொருட்கள் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். அப்போது வைஷ்ணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து சேலையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் வைஷ்ணவி ஆடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென வைஷ்ணவியின் கழுத்தை சேலை இறுக்கியது.
பின்னர் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். அதன் பிறகு வீட்டிற்கு வந்த வைஷ்ணவியின் பெற்றோர் மகளின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதற்கிடையே திருப்பூர் வடக்கு காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் சேலையில் ஊஞ்சலாடி கொண்டிருந்த 10 வயது சிறுமி திடீரென கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.