காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அடுத்துள்ள நடுப்பட்டி தேவேந்திர தெரு பகுதியில் வசித்து வருபவர் அண்ணாதுரை என்பவருடைய மகன் முதுநிலை பட்டதாரியான விஜய்(27). இவர் பேக்கரி தொழில் செய்து வருகின்றார். அதே பகுதியில் வசித்த சம்பத் என்பவருடைய மகள் இளங்கலை பட்டதாரியான ஷாலினி(24). இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோர்களும் சம்மதிக்கவில்லை.
இதனால் காதல் ஜோடிகள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறினார்கள். அதன்பின் அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள். இதையடுத்து காதல் ஜோடிகள் நேற்று முன்தினம் மதியம் வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் இருதரப்பு பெற்றோரையும் அழைத்துப் பேசி காதல் ஜோடிகளை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.