மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து போலியோ சொட்டு மருந்து முகாமில் மேற்கொள்ளக்கூடிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், துணை இயக்குனர் ராம்கணேஷ், இணை இயக்குனர் டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குனர் டாக்டர் யோகவிதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற 27-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் 1,264 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து முகம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் மக்களின் நலன் கருதி பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், போன்றவற்றில் நடமாடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, ஊட்டச்சத்து துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி துறை, கல்வித்துறை போன்ற துறைகள் ஒருங்கிணைந்து இந்த முகாமில் 5,060 பேர் பணியாற்ற உள்ளனர். எனவே பெற்றோர் தங்களது குழந்தைகளை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாயமாக போலியோ சொட்டு மருந்து போட்டு கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.