சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வைத்து தமிழக அரசு போக்குவரத்து துறை மற்றும் சாலை போக்குவரத்து துறை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன், பள்ளி தாளாளர் பழனியப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த், போக்குவரத்து துறை ஆணையர் கருப்பசாமி, மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் போக்குவரத்து துணை ஆணையர் கருப்பசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் உரிய உரிமம் பெற்று சாலையில் செல்லும் போது போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மேலும் 18 வயது நிரம்பாத மாணவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது.
இந்நிலையில் 18 வயது நிரம்பாத மாணவர்கள் வாகனம் ஓட்டினால் புதிய வாகன சட்ட திருத்த விதியின்படி அவர்களின் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். அதைப்போல் மாணவர்கள் தங்களது வீட்டின் அருகே 18 வயது பூர்த்தியடையாத யாராவது இருசக்கர வாகனம் ஓட்டினாலும் அல்லது வேறு வாகனம் ஓட்டினாலும் நீங்கள் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் உங்கள் பெற்றோர்களை கட்டாயமாக சீட் பெல்ட் அணிய சொல்ல வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.