குழந்தைகளுக்கு புதிய வகை காய்ச்சல் பரவுவதாக அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நமது தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பருவமழை காரணமாக ஏற்படும் காய்ச்சலால் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருந்தனர் . இதனால் பாதிப்புகள் அதிக அளவில் இல்லை. ஆனால் இந்த ஆண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 121 குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சல் மட்டுமே உள்ளது.
ஆனால் நமது தமிழ்நாட்டில் புதிய வகை காய்ச்சலான இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் 252 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் டெங்கு காய்ச்சலால் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது. எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அவர்களை அடிக்கடி கைகளை கழுவ சொல்ல வேண்டும் என அவர் கூறியுள்ளார்.