மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொடுக்கூர் குடிகாடு கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலிங்கம்(53) என்ற மகன் உள்ளார். இவர் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு ராமலிங்கம் வீட்டில் தனியாக இருந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ராமலிங்கத்தை தள்ளிவிட்டு அவரிடமிருந்து தப்பித்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து மாணவியின் பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ராமலிங்கத்தை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்து அரியலூர் மகிலா நீதிமன்றம் ராமலிங்கத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.