பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கனிராவுத்தர் குளம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்தோட்டில் இருக்கும் டாஸ்மாக் குடோன் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லோகநாதன் என்ஜினீயரான கவிதா என்ற பெண்ணை பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த லோகநாதனை கவிதா கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இரவில் சாப்பிட்டு விட்டு லோகநாதன் தூங்கிவிட்டார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்த போது கவிதா தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த லோகநாதன் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கவிதாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.