திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு செயலிகள் போன்றவற்றில் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு செல்கின்றனர். ஆன்லைன் விளையாட்டுகள் காரணமாக விவாகரத்து, வறுமை மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் சிறுவர்களும் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதால் குற்றவாளிகளாக மாறும் சூழ்நிலை அதிகரித்துள்ளது.
எனவே 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுவதை தவிர்க்கும் பொருட்டு பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறையை அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் சிறுவர்கள் ஆன்லைன் ஈடுபடுவதை தடுக்கலாம். எனவே பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணபிரசாத், மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டுகள் குறித்து 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு எப்படி தெரிகிறது? அரசாங்கத்தை காட்டிலும் குழந்தைகளின் வளர்ச்சியில் அதிக பொறுப்பு என்பது பெற்றோருக்கு தான் இருக்கிறது. சில பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி கொடுக்கின்றனர்.
ஆனால் எதற்காக குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனிக்க பெற்றோர்கள் தவறி விடுகின்றனர். இதனாலேயே சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டு வாழ்க்கை பாதை மாறுவது பெற்றோருக்கு தெரியவில்லை. அதனை தடுக்கவும் இயலவில்லை என கூறியுள்ளனர். விசாரணை முடிவில் வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பும் படி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.