வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் பிருந்தாவன் தெருவில் நூருல்அமீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நூருல்ஜான் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நூருல்அமீன் வேலைக்காக துபாய் சென்றுவிட்டார். அதன்பிறகு நூருல்ஜான் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். பின்பு நூருல்ஜான் சீனிவாசபுரத்திலுள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு நூருல்ஜான் அதிர்ச்சியடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன.
மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் மோதிரம் உள்பட 5 பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து நூருல்ஜான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் அருகிலிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.