அண்ணனை தம்பி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும், தங்கதுரை மற்றும் உதயகுமார் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் தங்கதுரை தன்னுடைய மனைவி ஜெயந்தியுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனையடுத்து மின் வாரிய துறையில் ஊழியராக வேலை பார்க்கும் உதயகுமார் அதே பகுதியில் வேறொரு வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் பார்வதி உதயகுமார் அவரை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மது போதையில் இருந்த உதயகுமார் தன் தாயாருடன் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்துள்ளார்.
இது குறித்து பார்வதி தங்கதுரையிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தங்கதுரை உதயகுமார் வீட்டிற்கு சென்று எதற்காக தாயை அடித்தாய் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த உதயகுமார் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து தங்கதுரையை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதைப்பார்த்த அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தங்கதுரையை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வடபழனி காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் உதயகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.